121. அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில்
இறைவன் முக்தீஸ்வரர்
இறைவி பொற்கொடிநாயகி
தீர்த்தம் சந்திர தீர்த்தம், அரிசிலாறு
தல விருட்சம் செம்மந்தாரை
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருத்திலதைப்பதி, தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வசதிகள் குறைவாக இருப்பதால் அன்பர்கள் மயிலாடுதுறையில் இருந்தோ அல்லது திருவாரூரில் இருந்தோ வரலாம்.
தலச்சிறப்பு

Tilathaipathi Gopuramநற்சோதிகன் என்னும் அரசனின் தந்தை இறந்து விட்டதால் அவருக்கு அரசன் பிதுர் காரியங்கள் செய்ய எண்ணினான். எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து பிண்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ, அதுவரை தொடர்ந்து பித்ரு காரியம் செய்வேன் என்று ஒவ்வொரு ஊராகச் சென்றான் அரசன். இறுதியில் 'திலதர்ப்பணபுரி' என்னும் ஊருக்கு வந்து பித்ரு காரியம் செய்து பிண்டம் இட்டவுடன் அன்னத்தை பித்ருக்கள் கைநீட்டி வாங்கிக் கொண்டனர். 'திலம்' என்றால் 'எள்' என்று பொருள். இந்த தலமே தற்போது 'திலதைப்பதி' என்று மாறிவிட்டது. கோயிலின் பெயர் மதிமுத்தம்.

இத்தலத்து மூலவர் 'முக்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை 'சுவர்ணவல்லி', 'பொற்கொடியம்மை' என்னும் திருநாமங்களுடன் அழகிய சிறிய வடிவில் காட்சி தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், இராமபிரான், அவர் வழிபட்ட பிதுர்லிங்கங்கள், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

Tilathaipathi Ramarஇராமபிரான் வனவாசம் சென்றபோது, அவரது தந்தையாகிய தசரதன் இறந்து விட்டதால், அவர் திரும்பி வரும்வழியில் இத்தலத்திற்கு வந்து தனது தந்தைக்கும், ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்தார். அவர் நான்கு பிண்டங்களை வைத்து சிரார்த்தம் செய்தபோது நான்கு பிண்டங்களும் லிங்கமாக மாறிவிட்டன என்பது செவிவழிச் செய்தி. அதனால் இக்கோயிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் இந்த நான்கு லிங்கங்களும், இராமபிரான் வடக்கு திசை நோக்கி வலது காலை மண்டியிட்டு அமர்ந்து வணங்கும் காட்சியும் உள்ளது. இது ஒரு அபூர்வமான தரிசனமாகும்.

முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வந்து வழிபாடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்று சேரும் நாள் அமாவாசை தினமாகும். அதனால் இங்கு தினமும் அமாவாசை, அதாவது நித்ய அமாவாசையாகும். அதனால் இக்கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நாள், கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவை பார்க்க வேண்டியதில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

Tilathaipathi Aathi Vinayagarஇத்தலத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு எழுந்தருளியிருக்கும் 'நரமுக விநாயகர்'. அதாவது விநாயகர் யானைமுகம் இல்லாமல் மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி திருவுருவம். ஆதலால் இவர் 'ஆதி விநாயகர்' என்று அழைக்கப்படுகின்றார். இவருக்கு கோயிலுக்குள் நுழைவதற்கு முன் வலதுபுறம் தனிக்கோயில் உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com